தஞ்சை சூலை 06: தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக ஜவுளி, நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதற்கிடையில் குடிமகன்கள் வருகை குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களுள் தஞ்சையும் ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. மேலும் இ -பதிவு முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல காணப்பட்டது.

அதே போன்று வாகன போக்குவரத்தும் அதிக அளவில் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசு வகுத்துள்ள வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு செயல்பட்டன. அதன்படி தஞ்சை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.

இதே போல் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டதால் விளையாட்டு வீரர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் காலை முதலே சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர். இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல, மெல்ல திரும்பத் தொடங்கி உள்ளனர்.

இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பொதுமக்களிடம் ஒலி பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் 56 நாட்களுக்குப் பிறகு நேற்று டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் 161 டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டன. மேலும் மதுப்பிரியர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தடுப்புகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறியீடுகளும் வரையப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. ஆனால் மதுப்பிரியர்களின் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. வெகு நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/