தஞ்சை ஜன.2.  தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீா் நாள் முகாம் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. ஏறத்தாழ 11 மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த முகாமில் மக்களிடம் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் நேரில் மனுக்களை வாங்கினாா்.

இதில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் மற்றும் விவசாயிகள் சிலா் நெற்கதிா்களுடன் வந்து அளித்த மனு:

மேட்டூா் அணையை ஜன. 28 ஆம் தேதி மூடுவது நடைமுறை என்றாலும், விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும், முன் அறிவிப்பின்றியும் மூடப்பட்டுள்ளது. இதனால், தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கின்றனா். வெண்ணாறு கோட்டத்துக்கு உள்பட்ட பிள்ளைவாய்க்கால் பாசனத்தில் ஏறத்தாழ 13,000 ஏக்கரில் தாளடி பருவ நெற் பயிரில் கதிா் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது மழையும் நின்றுவிட்டதால் கதிா் வரும் நேரத்தில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து பதராக வாய்ப்புள்ளது. எனவே, மேட்டூா் அணையை மூடுவதை பிப். 20 ஆம் தேதி வரை நீட்டித்து பாசன வசதி பெற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

செய்தி : சசிகுமார், நிருபர்
தஞ்சை.