தஞ்சாவூர் சன 16: தஞ்சாவூரில் நேற்று முழு ஊரடங்கில் முகக்கவசம் அணியாதவர்கள் 28 பேர் மற்றும் ஓட்டுனர் உரிமம், ஹெல்மேட் அணியாதது வந்தவர்கள் என 158 பேருக்கு ஆன்லைன் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகி உள்ளது.

இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மருந்துக் கடைகள், உணவகங்களைத் தவிர மளிகைக் கடைகள், காய்கனி கடைகள், இறைச்சிக் கடைகள், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால் தஞ்சாவூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, புதிய பேருந்து நிலையம் , கீழவாசல், தெற்கு வீதி, திருச்சி சாலை, கரந்தை, மகர்நோன்பு சாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை, விளார் சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, மணிமண்டபம், புதுக்கோட்டைச் சாலை ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இங்கு வாகனப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் போலீசார் சில இடங்களில் தடுப்புகளை அமைத்து இருந்தனர். இருப்பினும் ஆங்காங்கே பைக்குகள், கார்கள் சென்று வந்தன. இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் அண்ணா சிலை உள்பட 9 இடங்களில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜி. ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், முகக்கவசம் அணியாமல் வந்த 28 பேருக்கு அபராதமாக ரூ.5600 விதிக்கப்பட்டது.

இதேபோல் ஆன்லைனில் செலுத்தும் விதமாக ஓட்டுநர் உரிமம், செல்போன் பேசியபடி ஓட்டியது, நம்பர் பிளேட் சரியாக இல்லாதது என 158 வழக்குகள் பதிவானது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி வந்தவர்களை போலீசர் எச்சரிக்கை செயது அனுப்பினர்.
மருத்துவமனை உள்பட அத்தியாவசிய பணிகளுக்குச் சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர். நேற்று காணும் பொங்கல் என்றாலும் முழு ஊரடங்கு என்பதால் கொண்டாட்டம் இன்று தஞ்சாவூர் களையிழந்து காணப்பட்டது.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/