தஞ்சாவூர்: ஊரடங்கு காலத்தில் பொருளாதார பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் ஒருவேளை உணவிற்கே கஷ்டப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மனிதாபிமானம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பசித்தவர்கள் காசு இல்லாமல் உணவு எடுத்துச் செல்லலாம், என்ற விளம்பரத்துடன் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் ஐம்பது உணவு பொட்டலங்கள் மற்றும் ஐம்பது தண்ணீர் பாட்டில் பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு அடுக்கி வைக்கப்படுகிறது.

ஐம்பது உணவு பொட்டலங்களிலும், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவை இருக்கின்றன. வடசேரி சாலையில், மண்டகப்படி அருகே ஆண்டவர் செல்போன் கடை வைத்துள்ளார் வீரப்பன் மகன் ரஞ்சித் ( 33) . இவர். தனது கடையின் முன்பாக டேபிள் போட்டு, உணவு பொட்டலங்கள் அடுக்கி வைத்துள்ளார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பசித்தவர்கள் இந்த உணவு பொட்டலங்களை எடுத்துச் செல்லலாம்.

இவர் சிங்கப்பூரில் புத்தக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார், பட்டுக்கோட்டையில் உள்ள கடையை ஊழியர்களும், அவர் தந்தையும் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை