தஞ்சாவூர் ஆக 04: திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் போலீஸ் நிைலயத்தில் காதலர்கள் தஞ்சம் புகுந்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் திவ்யா (26). தாராசுரத்தை அடுத்த சோழன்மாளிகை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் குடும்பத்தினரும் நட்பு ரீதியாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் குணசேகரனுக்கும், திவ்யாவுக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக குணசேகரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது குணசேகரனும், திவ்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி குணசேகரனும், திவ்யாவும் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து காதல் ஜோடியின் பெற்றோர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதும், திவ்யா தனது கணவருடன் செல்ல விரும்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து திவ்யாவை குணசேகரனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/