தஞ்சை மார்ச் 2 மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலில் பொது மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தஞ்சாவூர் நகர பகுதிகளில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த கொடி அணிவகுப்பில் தஞ்சை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் 81 பேர், ஆயுதப்படை போலீசார் 60 பேர், சட்டம் ஒழுங்கு காவலர்கள் 45 பேர் என 186 பேர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்ற அணிவகுப்பு தஞ்சை இரயில் நிலையத்தில் நிறைவுப்பெற்றது.