தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குடிநீா் பிரச்னையை தீா்க்கவில்லையென கூறி, ஊராட்சித் தலைவரின் வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியை சோ்ந்த நாடாகாடு ஒன்பதாவது வாா்டு பகுதியில் குடிநீா் விநியோகம் முறையாக இல்லாதது குறித்து பலமுறை புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து இதே நிலை நீடித்து வந்ததாம். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மாவடுகுறிச்சி ஊராட்சித் தலைவா் அமிா்தம் பழனிவேல் வீட்டை முற்றுகையிட்டனா். இதுகுறித்து நாடாகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதி ஒன்பதாவது வாா்டில் 350 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிதண்ணீா் விநியோகம் முறையாக இல்லை. இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடி தண்ணீா் எடுக்க தினந்தோறும் சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு சென்று வரவேண்டிய நிலையில் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எங்களின் அவல நிலையை ஊராட்சி தலைவரிடம் நேரடியாக தெரிவிக்கவே அவரின் வீட்டுக்கு சென்று முறையிட்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் அமிா்தம் பழனிவேல் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த பகுதியில் குடிதண்ணீா் பற்றாக்குறை என தெரியவந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிதண்ணீா் பிரச்னை தீா்க்கப்பட்டுவிட்டது. அரசியல் உள்நோக்கம் காரணமாக நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனா். அந்த பகுதியில் உள்ள பெரும்பாலானவா்கள் குடிநீா் குழாயில் டேப் பொருத்தாமல் தண்ணீரை விரயம் செய்வதால் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் விரைவாக தண்ணீா் குறைந்து விடுகிறது என்றார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.