தஞ்சை சூன் 24: தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மற்றும் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்த நெல் குவியல்களைத் தண்ணீா் சூழ்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தஞ்சாவூா் அருகே கோடைப்பருவ நெல்லை அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைத்திருந்த நெல்குவியல்களை மழை நீா் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கண்ணன் தெரிவித்தாவது:
தஞ்சாவூா் அருகே கோவிலூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த தாா்பாய்கள் மூலம் நெல் குவியல்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கொள்முதல் செய்ய தாமதமாவதால் ஏறத்தாழ 20 நாள்களாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.
நேற்று பெய்த மழையில் நெல் குவியல்கள் நீரில் மூழ்கும் அவல நிலை உள்ளது. இதுபோன்ற நிலைமை பல கொள்முதல் நிலையங்களில் நிலவுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.