தஞ்சை,பிப்.10-
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கீடு செய்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 25 நாட்களாக மழையின்றி வெயில் அடிப்பதால் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சையை அடுத்த மானாங்கோரை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 நாட்களாக திறக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அங்கு கொள்முதல் செய்வதற்காக மூட்டை மூட்டையாக நெல் தேங்கியுள்ளது. சுமார் 2000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.
விவசாயிகள் இரவு பகலாக நெல் மூட்டைகளை காவல் காத்து வருகின்றனர். மேலும் குவித்து வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நெல்கள் முளைக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே தொடர் மழையால் மகசூல் குறைந்த நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லும் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துளளதால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மானாங்கோரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.