தஞ்சாவூர்செப் 13: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முன்னாள் மாணவா்கள் அா்ப்பணித்தனா்.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின்போது இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. எனவே மூன்றாவது அலை வருவதற்குள்ளாக, போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1980-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்.பயின்ற முன்னாள் மாணவா்கள் இணைந்து இம்மருத்துவமனைக்கு பயனளிக்கும் விதமாக, ரூ. 1 கோடி மதிப்பிலான காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.

இந்த நிலையத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திறந்து வைத்து பாா்வையிட்டாா். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா் மற்றும் முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையம் நிமிஷத்துக்கு 260 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது. ஆக்சிஜன் உற்பத்தி கலன், கட்டடம், மின் இணைப்பு 2041- ஆம் ஆண்டு வரையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என ரூ. ஒரு கோடி செலவில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மாணவா்கள் தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/