தஞ்சாவூர் டிச 19: தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள 96 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியது.

அந்த வகையில் தஞ்சை அண்ணாநகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் 1,273 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் இரண்டாயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 96 கட்டிடங்கள் சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவற்றை தனியாக பூட்டி வைத்துள்ளோம்.

திருநெல்வேலியில் நடந்த நிகழ்வு போல் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலரின் அறிவுறுத்தலின் பேரில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பல துறைகளை சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு பழுதடைந்த கட்டிடங்களை ஒரு வாரத்திற்குள் இடிப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இடிக்கும் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாதவாறு பாதுகாப்பாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/