தஞ்சாவூர் டிச.8 – தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டு, ரூ. 29.93 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையத்தில் 434 இரு சக்கர வாகனங்கள், 61 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான நிறுத்துமிடம், 31 கடைகள், 8 உணவகங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், இப்பேருந்து நிலையத்தைத் திறக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் பேருந்துகளில் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு திருவையாறு துரை. சந்திரசேகரன்,கும்பகோணம் சாக்கோட்டை க. அன்பழகன்,தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார்,மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்,சான்றோர் பெருமக்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பேருந்து நிலையத்தில் இன்னும் சிறு சிறு பணிகள் நிலுவையில் உள்ளதால், கடைகள் திறப்பு மற்றும் பேருந்துகள் இயக்கத்துக்கு முழுமையாகச் பணிகள் முடிந்து, செயல்பாட்டுக்கு வர இன்னும்10 நாட்களுக்கு பிறகு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today