தஞ்சாவூர் சன 20: தஞ்சை மாவட்டத்தில் 191 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எம்பிகள் தஞ்சாவூர் பழனிமாணிக்கம் மயிலாடுதுறை ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுடன் நெல் கொள்முதல் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு காரிப் பருவம் 2021-2022 ஆண்டுக்கான குருவை இலக்கு 1,06,250 ஏக்கராகும். சரியான நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதாலும், தூர்வாரும் பணிகள் முறையாக செய்யப்பட்டதாலும், குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை அளவாக 1,66,135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுவை பருவத்தில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 11 மொபைல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 1,97,633 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்வாயிலாக 40,619 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் தற்போது சம்பா, தாளடி இலக்கான 3,12,599 ஏக்கருக்கு பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாதனையாக 3,42,973 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்வதற்காக 650 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டு சம்பா பருவத்திற்காக கடந்த 17ம் தேதி வரை 191 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 8,559 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, பயிற்சி கலெக்டர் கௌசிக், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், கும்பகோணம் அன்பழகன் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல பொது மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/