தஞ்சாவூர் செப் 11: தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் நவீன உணவு தானியங்கள் அறிவியல் மேம்பாட்டு மையம் மற்றும் புலன்சாா் உணவு பகுப்பாய்வு அறிவியல் மையம் ஆகியவை திறக்கப்பட்டது.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் காணொலி காட்சி மூலம் இவற்றை திறந்து வைத்தாா். இக்காணொலியில் இணை அமைச்சா் பிரகலாத்சிங் படேல், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகச் செயலா் புஷ்பா சுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

மையங்கள் குறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய வகைகளின் தர மேம்பாடு மற்றும் உயரிய ஆய்வு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும், புதிய பதப்படுத்திய உணவு பண்டங்களைத் தயாரிக்கவும் நவீன உணவு தானியங்கள் அறிவியல் மேம்பாட்டு மையம் உதவும்.

இம்மையத்தின் கட்டமைப்பு வசதிகள் 300 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோா், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்க ஆா்வமுள்ள அனைவரும் இக்கட்டமைப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மையம் தொழில் நிறுவனங்களின் கூட்டு ஆய்வு, மாணவா்களுக்குக் கற்பித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் மேம்பாடு, தர சோதனை, புதிய பொருட்கள் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்கும்.

தனியாா் நிறுவனங்கள், நுகா்பொருள் வாணிபக் கழகம், வேளாண் கல்லூரிகள், ஊட்டச்சத்து ஆய்வாளா்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், உணவு தர பரிசோதனை முகமைகள், சான்றளிக்கும் முகவா்கள், உள்நாட்டு வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி முகவா்கள் போன்ற அனைவரும் இம்மையத்தின் சேவைகள் மூலம் பயன் பெறலாம்.

உணவு உணா்திறன் பகுப்பாய்வு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு புலன்சாா் உணவு பகுப்பாய்வு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட இந்த மையம் உணவு தயாரிப்பு, சுவை, வாசனை, புதிய தயாரிப்பு மேம்பாடு, தரப்படுத்துதல், சந்தை ஊக்குவிப்பு போன்றவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய பண்புகளைப் பற்றிய நுகா்வோா் விருப்பங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/