தஞ்சாவூா் செப் 17: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5.06 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திறந்து வைத்தாா்.

பின்னா், அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கு பொதுப் பணித் துறை மூலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரக் கிடங்கில் தரை தளம் மற்றும் முதல் தளம் தலா 7,944 சதுர அடிப் பரப்பளவிலும், முகப்பு மண்டபம் 183 சதுர அடிப் பரப்பளவிலும் என மொத்தம் 16,071 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் தலா ஒரு பாதுகாப்பு அறை, கழிப்பறையுடன் கூடிய காவலா் ஓய்வறை, பணியாளா்களுக்கான கழிப்பறை, மின் தூக்கி, படிக்கட்டுகள், முதல் மற்றும் இரண்டாம் கட்டச் சோதனை அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இக்கிடங்கு 5,040 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 9,320 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 4,924 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கும் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, பொதுப் பணித்துறைச் செயற் பொறியாளா் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/