தஞ்சாவூர் ஆக 21: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூா் மற்றும் ஒக்கநாடு கீழையூா் ஆகிய இரண்டு கிராமங்கள் தோட்டக் கலைத் துறையின் மாதிரி கிராமங்களாக தோ்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான தொடக்க விழா நடந்தது.
தமிழ்நாடு வேளாண் நீா்ப்பாசன மயமாக்குதல் திட்டத்தின்கீழ் ஒற்றை சாளர அமைப்பு மையத்தை தோட்டக்கலை உதவி இயக்குநா் சாந்திப்பிரியா தொடங்கி வைத்தாா். தோட்டக் கலை உதவி அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில், வேளாண்மை துறை, வேளாண் விற்பனைத் துறை, பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, கால்நடை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு இந்த திட்டத்தை குறித்தும் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். இந்த இரண்டு மாதிரி கிராமங்களுக்கும் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தனா்.
வாரந்தோறும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்துறை வல்லுநா்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், கண்ணந்தங்குடி கீழையூா் ஊராட்சித் தலைவா் மாரிமுத்து, ஒக்கநாடு கீழையூா் ஊராட்சித் தலைவா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் கலைச்செல்வன் செய்திருந்தாா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/