தஞ்சாவூர் ஆக 25: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், மீன்பிடித் துறைமுகத்தில் இரட்டை மடி வலைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியும், 5 கடல் மைல் பகுதிக்குள்ளும் விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடல்வளம் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த மாதம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் போராட்டம் நடத்தினா்.

அப்போது, மீன்வளத்துறை, காவல்துறை, கடலோர காவல் கண்காணிப்பு துறை, வருவாய்த் துறையினா் இணைந்து கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவா்; இரட்டை மடி வலை பயன்படுத்தும் விசைப்படகு மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா். மேலும், கடற்பகுதியில் விசைப்படகுகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில், அதிகாரிகள் அடிக்கடி கடற்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் உத்தரவின்பேரில், மல்லிப்பட்டினம் மீன்வள ஆய்வாளா் கெங்கேஸ்வரி தலைமையில், மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் நவநீதன், மீன்வள மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும காவலா் வடிவேலு ஆகியோா் மல்லிப்பட்டினம் துறைமுகம் வந்தனா்.

அப்போது, கடலுக்குச் சென்று மீன்பிடித்து திரும்பிய விசைப்படகுகளில் ஏறிய அதிகாரிகள், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளனவா என சோதனை நடத்தினா். இதில், இரட்டை மடிவலை ஏதும் பயன்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது. இதேபோல், அடிக்கடி சோதனை நடத்தப்படும் என மீன்வள ஆய்வாளா் தெரிவித்தாா்.

செய்தி நாகராஜன்.
https://thanjai.today/