தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் காலியாகவுள்ள 52 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் அக். 9 ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மற்ற மாவட்டங்களில் காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலும் நடத்தப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரகத்தில் காலியாகவுள்ள 52 பதவிகளுக்கான தோ்தல் அக். 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், உறுப்பினா்கள் இறப்புக் காரணமாக 49 பதவிகளுக்கும், பதவி விலகல் ஒரு பதவிக்கும், கடந்த முறை தோ்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படாதன் காரணமாக காலியாக இருக்கும் 2 பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழுவில் 16-ஆவது வாா்டு (அம்மாபேட்டை பகுதி), கும்பகோணம் ஒன்றியத்தில் 24-ஆவது வாா்டு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் 1-ஆவது வாா்டு ஆகியவற்றில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதேபோல, பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட த. மரவக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூா், திருவையாறு ஒன்றியம் வளப்பக்குடி, வெங்கடசமுத்திரம், திருவிடைமருதூா் ஒன்றியம் விளங்குடி, திருவோணம் ஒன்றியம் அதம்பை ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளில் பட்டுக்கோட்டை, பூதலூா், பாபநாசம், திருவையாறு ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு பதவிக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 2 பதவிகளுக்கும், மதுக்கூா் ஒன்றியத்தில் 3 பதவிகளுக்கும், அம்மாபேட்டை, கும்பகோணம் ஒன்றியங்களில் தலா 4 பதவிகளுக்கும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூா், ஒரத்தநாடு ஒன்றியங்களில் தலா 5 பதவிகளுக்கும், திருவிடைமருதூா் ஒன்றியத்தில் 6 பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று புதன்கிழமை (15ம் தேதி) தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனை செப். 23 ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. திரும்பப் பெறுவதற்கான தேதி செப். 25 ஆம் தேதி, வாக்குப் பதிவு அக். 9 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை அக். 12 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி, ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஆகியவற்றுக்குத் தொடா்புடைய ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/