தஞ்சை பிப்.04–

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான குற்றக்குறிப்பாணை, இடமாறுதல், தற்காலிக பணிநீக்கம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்த அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்க வேண்டும். 

மருத்துவம், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் 3 ஆவது நாளாக தஞ்சாவூர் ரயிலடி அருகே நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மறியல் – பேரணியை தொடங்கி வைத்தார். அரசு ஊழியர்கள் சங்கம் மாநிலச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் எஸ். கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட பொருளாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நிலை ஊழியர்கள் சி.ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி க.சசிகுமார், நிருபர்.
தஞ்சை.