தஞ்சை ஏப்ரல் 19 தஞ்சை கொரோனா தொற்று பீதி காரணமாக பஸ்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இது தொவைதூர பஸ்கள் மட்டுமின்றி டவுன் பஸ்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டும். நின்று செல்ல யாரையும் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஓரிரு பஸ்களில் மட்டுமே பயணிகள் அதிகஅளவில் பயணம் செய்கின்றனர். அதுவும் மாவட்டத்திற்குள் செல்லக்கூடிய டவுன் பஸ்களில் கூட பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்செந்தூர் உள்பட வெளியூர் செல்லும் பஸ்களில் இருக்கைகள் கூட நிரம்பாமல் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்வதை காண முடிகிறது.

சில பகுதிகளுக்கு பயணிகள் இல்லாமல் வெறும் பஸ்களும் இயங்குகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் மக்கள் தஞ்சை நகரத்திற்கு தினமும் வந்து செல்வது வாடிக்கை. ஆனால் கொரோனா பரவுகிறது என்றவுடன் தஞ்சை நகரத்திற்கு வரும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் தஞ்சை தற்காலிக பேருந்து நிலையம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

இதுஒருபுறம் என்றால் தொலை தூரம் பயணம் செய்யும் மக்களுக்காக குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்படுகின்றனர். குளிர்சாதன வசதி பஸ்களில் கொரோனா எளிதாக பரவக்கூடும் என்பதால் மக்கள் அவ்வகை பஸ்களை தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து வழக்கமாக பகலில் 7 பஸ்களும், இரவு நேரத்தில் 10 பஸ்களும் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகலில் 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. முன்பதிவு செய்ய யாரும் முன்வருவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் தங்களின் இருச்சக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களால் அவ்வபோது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் மருத்துவர் பலர், கொரோனா என்பது நாம் நினைப்பது போல பெரிய ‍தொற்றல்ல, அதனை சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், முக மூடி, சத்தான உணவு, உடற்பயிற்சி குறிப்பாக கொரோனா காலத்தில் நுரையிரல் சம்பந்தமான பயிற்சி இவற்றினை செய்தால் கொரோனாவை எளிதில் கடக்கலாம் என அறிவுறுத்துகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.