தஞ்சாவூர், மார்ச்.5- தஞ்சை மாவட்டம் இலுப்பைக்கோரை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புதிய பஸ் வழித்தடம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சண்முகம் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் ஆணைப்படி பாபநாசம் தாலுகா இலுப்பைக்கோரை கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் கிராமத்தைச் சுற்றி உள்ள பொதுமக்கள் பயன் பெறுவர். தஞ்சாவூர் கிளையை சேர்ந்த சாதாரண கட்டணம் நகர பஸ் தடம் எண்.பி26 மூலம் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினம்தோறும் காலை 7.50 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் புறப்பட்டு அய்யம்பேட்டை, மதகடி, இலுப்பைகோரை வழியாக கணபதி அக்ரஹாரம் சென்றடையும்.

இதேபோல் கணபதி அக்கிரஹாரத்தில் இருந்து காலை 8.45 மணிக்கும், மாலை 5.25 மணிக்கும் புறப்பட்டு இலுப்பைகோரை, அய்யம்பேட்டை, மதகடி வழியாக தஞ்சாவூர் சென்றடையும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன், துணை மேலாளர்கள் செந்தில், ராஜேஷ், இலுப்பைகோரை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/