தஞ்சாவூர் செப்.2. – ஒன்றிய அரசு நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! இன்று தஞ்சையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராளி அனிதா நான்காம் ஆண்டு நினைவு நாளில் கோரிக்கை.


சமஸ்கிருதம் படித்த உயர் சாதியினரிடம் மட்டுமே சிக்கிக் கிடந்த மருத்துவ படிப்பானது நீதிக்கட்சியின் காலத்தில் பனகல் அரசர் ஆட்சியில் அனைத்து சமூக மக்களும் படிக்கும் வண்ணம் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் தமிழ்நாட்டில் நமது மாணவர்கள் மருத்துவம் பயில தொடங்கியதன் விளைவே இன்றும் தமிழ்நாடு மருத்துவ குறியீட்டில் இந்திய ஒன்றிய மாநிலங்களில் முதல் இடத்தை பெற்று வருகிறது.

இந்துத்துவா கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு என்னும் ‘அனைத்து இந்திய மருத்துவ கல்லூரிகளுக்கும் ஒற்றை நுழைவு தேர்வை’ 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மீது திணித்தது. அன்று ஆட்சியில் இருந்த அடிமை அதிமுக அரசால் மக்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டது.

நீட் அறிமுகப் படுத்துவதற்கு முன் ஏழை-எளிய-கிராமப்புற- பட்டியலின-அரசு பள்ளியில் நமது மாணவ மாணவியர்களுக்கு கிடைத்துவந்த மருத்துவப் படிப்பு பிறகு எட்டாகனியாக மாறிப்போனது. குறிப்பாக நீட் பயிற்சி மையங்களில் பல இலட்சங்கள் செலவு செய்து நகரங்களில் வசிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றாயிற்று.

அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களில் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதாவும் ஒருவர். ஏழை சுமை தூக்கும் தொழிலாளியின் மகளான, பண்ணிரெண்டாம் வகுப்பில் 1200-க்கு 1176 மதிப்பெண் இலக்கை அடைந்தவருமான அனிதா, நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைசென்று தோல்வியுற்று தன் மருத்துவ படிப்பை அடைய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார்.

தஞ்சாவூர் ரயிலடி முன்பாக அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர், மருத்துவர் ச.சுதந்திர பாரதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் மருத்துவப் படிப்பை பறிக்கின்ற நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இளங்கலை படிப்பு முதல் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் வரை நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், குலக்கல்வி முறையை மீண்டும்கொண்டு வரும் புதிய தேசிய கல்வி கொள்கை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் ஏஐடியூசி மாநில செயலாளர், வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கிய கழக மாநகர செயலாளர் இராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பி.கிருணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வெ.சேவையா, ஆர்.பி.முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா,நிர்வாகி அருள்,அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க துணைத்தலைவர்கள் கே.சுந்தரபாண்டியன், டி.ரெஜினால்டு ரவீந்திரன் ,சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், ரயிலடி ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/