தஞ்சாவூர் ஆக 9- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம். தஞ்சாவூர் ரயிலடியில் இன்று நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் நூறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒன்றிய பாஜக மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்தும் ,மக்கள் விரோத ,தொழிலாளர் விரோத ,விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு இன்று காலை 10 மணிக்கு ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் முடித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் வீர. மோகன், காளியப்பன், அருண்ஷோரி , ராவணன் ,விதொ.ச மாவட்ட தலைவர் அபிமன்னன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி வாழ்த்துரை வழங்கினார்.முடிவில் தொமுச அமைப்புசாரா பிரிவு செயலாளர் பாஸ்டின் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளையும், மக்கள் விரோத வேளாண்மை சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்.

வேலை இழப்பினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்வு செய்ய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் ,ஆட்குறைப்பு சம்பள வெட்டு ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் ,பொது துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்ற தடையை ரத்து செய்ய வேண்டும்.

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், வேலை நாட்களின் எண்ணிக்கையையும், சம்பளத்தையும் உயர்த்த வேண்டும், நகரங்களுக்கும் இதனை விரிவுபடுத்தப்பட வேண்டும். வருமானவரி கட்டுவதற்கான வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் கட்டணமின்றி தடுப்பூசி போடவேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார்மயப் படுத்துவதை கைவிட வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் செங்குத்தான விலை உயர்வை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

கட்டுமான ,தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியங்களை முறையாக செயல்படுத்தவும், நலவாரிய நிர்வாகத்தையும், நல் நிதியையும் பறிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பாபநாசம் திருவையாறு ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி அதிராம்பட்டினம் மதுக்கூர்உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள 100 கிளைகளில் மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/