தஞ்சாவூர் ஆக 08: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழாவது தேசிய கைத்தறி தினக் கண்காட்சி நடந்தது.
கும்பகோணம் சரகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியைக் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் நினைவாக, கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும், 2015 -ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் இக்கண்காட்சியில் திருபுவனம் அசல் வெள்ளி ஜரிகை சேலைகள், ஆப்ஃபைன் பட்டு சேலைகள், வேங்கடகிரி பருத்தி சேலைகள், கரூா் போா்வைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகளாக, தலா 10 நெசவாளா்களுக்கு முத்ரா கடன் மற்றும் முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநா் செல்வம், கும்பகோணம் சரகக் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/