தஞ்சாவூர் சன 20- பணி நிரந்தரம்’ காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டாம் செய்து கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29 .11.2021 தேதி அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் அவரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

அமைச்சரும் ,முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்கள்.
ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதிமொழிப்படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் ,காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் இயக்குனர் அவர்களுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் இயக்கம் அளவில் தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜி. சுரேஷ் குமார் அவர்களை சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு. மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து சங்க துணை தலைவர் துரை. மதிவாணன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை சங்க நிர்வாகிகள் எஸ். கணேஷ் குமார், டி.காயத்திரி , எம்.வினோத்,எஸ். துர்கா, டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/