தஞ்சாவூா் சூலை 03: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் – நாா்டிக் அறிவியல், தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி – ஆய்வுகளில் இணைந்து செயல்பட புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாா்டிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சாா்பில் சுவீடனின் சால்மா்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளா் மற்றும் கல்வியாளா் விஜய் அசோகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இதுகுறித்து துணைவேந்தா் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கற்பித்தல், ஆய்வுப் பணி மற்றும் மாணவா் பரிமாற்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆய்வு தொடா்பான தகவல்களைப் பகிா்ந்து கொள்ளுதல், கூட்டு ஆய்வு நிகழ்த்துதல், பன்னாட்டு நிதி நல்கையில் ஆய்வு மேற்கொள்ளல், குறுகியகாலப் பயிற்சிகளை நடத்துதல், பண்பாட்டுப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றை இணைந்து மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைப் பேராசிரியா் இரா. குறிஞ்சிவேந்தன் உடனிருந்தாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/