தஞ்சை மே 10: தஞ்சையில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியும் எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார்.

தஞ்சையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 850க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் கீழவாசல் பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களை பாதுகாப்புடன் காக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். நிவாரணத் தொகையை ரூபாய் 2000, முதல் கட்டமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கிற்கு முழுமையாக பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக துணை செயலாளர்கள் நீலகண்டன், சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.