தஞ்சையை அடுத்து பள்ளியக்ரஹாரம் என்ற கிராமத்தில் நடவு செய்த நிலத்தில் மேய்ந்ததாக காளை மாட்டின் காலை வெட்டிய கொடுமை நடந்தேறியுள்ளது, மனிதனுக்குத்தான் சொத்து, நிலம் உரிமை என்றெல்லாம் தெரியும், மாட்டிற்கு உணவு என்பதை தவிர வேறேதுவும் தெரியாது.
சென்ற 8ந்தேதி சில மாடுகள் தரிசு நிலத்தில் மேய்ந்துள்ளன, அதற்குப்பக்கத்தில் மந்திரி என்பவரின் நிலமுள்ளதாம், அதில் நெல் நடவு நடந்துள்ளதாம், மாடுகள் நிலத்தில் இறங்கி மேய்ததாக நில உரிமையாளர் மந்திரியின் மைத்துனர் காமராஜ் அரிவாளுடன் வந்து ஆனந்த் என்பவரின் காளை மாட்டின் காலை வெட்டியுள்ளார்.
வெட்டியவுடன் ஏதும் அறியாத காளை மாடு அங்கேயே விழுந்து விட்டது, தகவலறிந்து ஒடி வந்த ஆனந்த் வெட்டுப்பட்ட காலுடன் உயிருக்கு போராடும் தனது மாட்டினை பார்த்து கதறி அழுதுள்ளார், மருத்தவரும் பரிசோதித்து விட்டு, கால் சரி செய்ய முடியாத அளவிற்கு வெட்டுப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
முன்று நாட்களாக ஆனந்தின் குடும்பமே அவர்களது மாட்டிற்கு அருகே உட்கார்ந்து ஏதும் செய்ய இயலாதவர்களாக இருந்துள்ளார்கள், பின்னர் நடுக்காவேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் ஆனந்த் கூறினார்.
ஆனந்த் மாட்டு வண்டி வைத்து பிழைத்து வரும் நிலையில் ஒரு மாட்டின் காலை வெட்டி அது உயிருக்கு போராடி வரும் நிலையில், அதனுடைய இணை காளை மாடு தனது ஜோடி மாடு வலியால் கத்திக் கொண்டே இருப்பதை சுற்றி சுற்றி வந்து பார்த்துக் கொண்டே உள்ளதாம், மாடுகளுக்கு உள்ள நட்பும் பரிவும் கூட ஒரே ஊர் மனிதர்களுக்கு இல்லையே என்பது வேதனையான ஒன்று தான்.
செய்தி ம.செந்தில்குமார்