பட்டுக்கோட்டையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் அமைச்சர் ஆய்வு!.

தஞ்சை மே 31: பட்டுக்கோட்டையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, தஞ்சை மாவட்ட வர்ண கலைஞர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்து சனிடைசர் அளிப்பது போல் ஓவியம் வரையப்பட்ட வீட்டில் இரு இரு, விழித்திரு, விலகி இரு என்ற விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

அதன் முன்பு பள்ளிக்கல்வித்துறை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யமொழி, கொறடா கோவி. செழியன், எம். எல். ஏ. , அண்ணாதுரை, கலெக்டர் கோவிந்த ராவ் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஓவியம் வரைந்த வசந்தகுமார், செல்வம், சுந்தரமூர்த்தி பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். ஆக்சிஜன் இருப்பு மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

மருத்துவமனை சார்பில் 10 மருத்துவர்களும் 25 செவிலியர்களும் பணியமர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். பின்னர் கொரோனா தனிமைப்படுத்தும் மய்யத்திற்கு சென்று நோயாளிகளிடம் நீங்கள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், மருத்துவர்கள் கொடுக்கும் உணவு பொருள்களை உட்கொள்ள வேண்டும். வீட்டுக்கு சென்றவுடன் டாக்டர்கள் சொல்வதை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேல் இருந்தது இப்போது 800க்கும் குறைவான நோயாளிகள் உள்ளனர். தேவையான மருத்துவ உபகரணங்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் வேலை பார்ப்பவர்கள் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். அந்த வேதனையான விஷயம் பள்ளி ஆசிரியர்களும் எனக்கு மின்னஞ்சல், கடிதம் , தொலைபேசி மூலம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசி அதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்று குளறுபடி உள்ளது. விரைவில் அதற்கான தீர்வுகள் வெளியிடப்படும்.

நீட் தேர்வு எந்த காலத்திலும் தமிழகத்திற்குள் கொண்டு வரமாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் நல்ல தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கால இடைவெளி விட்டு அதன் பின்னர் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் எம்பி பழனி மாணிக்கம், சப் -கலெக்டர் பாலச்சந்தர், தாசில்தார் தரணிகா தலைமை மருத்துவர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்