தஞ்சை : தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள வாய்க்கால்களில் பள்ளங்கள் அமைத்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோடை மழை நீரை சேமிக்கவும், அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

சிறு கிளை வாய்க்கால்களின் நீள, அகலத்துக்கு ஏற்ப 3½ அடி நீளத்திலும், ஒரு அடி ஆழத்திலும், 1½ அடி அலகத்திலும் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. பூதலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள வாய்க்கால்களில் இது போன்ற பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி முத்தாண்டிபட்டி பகுதியில் உள்ள வாய்க்கால்களில் நிலத்தடி நீரை சேமிக்கவும், வாய்க்கால்களை சீரமைப்பு செய்யவும் ஏதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பள்ளத்துக்கும் இடையில் சிறிய அளவில் இடைவெளி இருப்பதால் வழக்கமாக தண்ணீர் வரும் நேரங்களில் பள்ளம் மற்றும் மேடு பகுதிகள் சமமாகி பாசனத்துக்கு உகந்த வகையில் தண்ணீர் செல்ல வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை.