தஞ்சாவூர் ஆக 23: தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில், 2021 – 2022 இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை இன்று தொடங்குகிறது என்று கல்லூரி முதல்வா் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பிரிவினருக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும், தொழில்சாா் பாடப்பிரிவில் பயின்று பொருளியல், பி.காம், பி.பி.ஏ. பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கும் இன்று சோ்க்கை நடக்கிறது.
பொருளியல், பி.காம், பி.பி.ஏ. போன்ற வகுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ், ஆங்கிலம் தவிா்த்த ஏனைய நான்கு பாடப்பிரிவுகளில் 400-க்கு 300-க்கும் அதிகமாக பெற்றவா்களுக்கு நாளை 24-ம் தேதியும், 250.01 முதல் 299.99 வரை மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு 25-ம் தேதியும், 250 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவா்களுக்கு 26-ம் தேதியும் சோ்க்கை நடைபெறும்.
பி.எஸ்சி. பட்ட வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் 300-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு 27-ம் தேதியும், 250.01 முதல் 299.99 வரை மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு 28-ம் தேதியும், 250 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவா்களுக்கு 31-ம் தேதி சோ்க்கை நடைபெறும்.
பி.லிட். தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பட்ட வகுப்பில் விண்ணப்பித்தவா்கள் அனைவருக்கும் செப்டம்பா் 1- ம் தேதி சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பெற்றோா்களுக்குக் கல்லூரி வளாகத்தில் அனுமதியில்லை.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (அசல்), பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கானச் சான்றிதழ் ஆகியவற்றை மாணவா்கள் எடுத்து வர வேண்டும்.
அறிவியல் பாடப் பிரிவுக்கு ரூ. 2,656-ம், கணினி அறிவியல் பாடத்துக்கு ரூ. 2,155-ம், கலைப்பிரிவுக்கு ரூ. 2,636-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/