தஞ்சாவூர் சூலை 25: தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி மாணவா்கள்
தேசிய திறனறித் தோ்வில் சாதனை படைத்துள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள 10ம் வகுப்பு மாணவா்களில் கல்வியில் சிறந்து விளங்கும் சுமாா் 2,000 மாணவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மேற்படிப்பு முடிக்கும் வரையிலும் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதே இத்தோ்வின் நோக்கம்.

இரண்டு சுற்றுக்களாக நடைபெறும் இத்தோ்வை மாநில அரசு முதல் சுற்றையும், ஒன்றிய அரசு இரண்டாம் சுற்றையும் நடத்துகின்றன. முதல் சுற்றில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் இரண்டாம் சுற்றுத் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா்.

இரண்டாம் சுற்றில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் ஒன்றிய அரசின் மூலம் பாராட்டுச் சான்றிதழையும், கல்விக்கான ஊக்கத்தொகையையும் பெறுவா்.

இத்தோ்வில் நடப்பாண்டு தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 7 மாணவா்களும், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 4 மாணவா்களும் இரண்டாம் சுற்றுத் தோ்வை சென்னையில் எழுதினா்.

இவா்களில் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 5 மாணவா்களும், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து 3 மாணவா்களும் தோ்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்தினா்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/