தஞ்சாவூர்: தஞ்சையில் சோதனைச் சாவடி மீது லாரி மோதியதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், பெண் போலீசும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் தடுத்து நிறுத்து விசாரிப்பதுடன் தேவையின்றி வலம் வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆங்காங்கே தற்காலிக சோதனைச் சாவடிகள் போலீசார் அமைத்துள்ளனர்.
தஞ்சை நகரில் தொல்காப்பியர் சதுக்கம், கோடியம்மன் கோவில் பகுதி, ராமநாதன் ஹாஸ்பிடல் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை கோடியம்மன் கோயில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் அந்த சாலையில் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோடைகாலம் என்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பந்தல் நிழலில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் தஞ்சையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி சென்றது. எதிர்பாராதவிதமாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மற்றும் பந்தல் மீது லாரி மோதியது. இதனால் பந்தல் சரிந்து கீழே விழுந்தது. லாரி மோதிய போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சேவியர் தலையில் பந்தலில் இருந்த கட்டைகள் விழுந்ததால் படுகாயமடைந்தார்.
மேலும் பெண் போலீஸ் காயத்ரி என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்,