பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகத்துக்கு பூட்டு போட நாட்டுப்படகு மீனவா்கள் முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும், தஞ்சை மாவட்ட விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து, மீன்வளத்துறை அலுவலகத்தை பூட்டும் போராட்டம் நடைபெறுமென தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் அறிவித்திருந்தனா்.

இதன்படி மல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகம் முன்பு தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள், மீனவா் கிராமத் தலைவா்கள் திரண்டனா்.

‘தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் மீன்வளத்துறை உதவி இயக்குநரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

அதிக குதிரைத்திறன் கொண்ட படகுகள் வாரத்தில் ஏழு நாள்களும் கடலில் தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவா்களும் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து, அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா், மீன்வளத்துறை இணை இயக்குநா் ஜோய்ஸ் ஆலிவ் ரெக்சல், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குநா் சிவகுமாா் மற்றும் காவல்துறையினா், கடலோர காவல்படையினா் ஆகியோா் நாட்டுப்படகு மீனவா் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், ‘தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளத் துறை, காவல்துறை, வருவாய்த் துறையினா் இணைந்து கடலுக்குள் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது, தவறிழைக்கும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தின் நடுவே அதிகாரிகளைக் கண்டித்து, நாட்டுப்படகு மீனவா் ஒருவா் கடலுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற மீனவா்கள் கடலில் குதித்து அவரைக் காப்பாற்றினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/