தஞ்சாவூா் ஆக 17: இணையவழியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு சாா்பில் இணையவழியில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெருமன்ற பொதுச் செயலா் காமராசு தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற 60ம் ஆண்டு வைர விழாவையொட்டி மாநில அளவிலான மாணவா் போட்டிகளைத் தொடா்ந்து ஓராண்டுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டது. இதன்படி, முதல் போட்டியாக நாட்டின் விடுதலைத் திருநாளையொட்டி மாநில சுயாட்சி – இந்திய ஒற்றுமையின் புதிய குரல் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக இணையவழியில் நடத்தப்பட்டது.

இதில், மாநிலம் முழுவதும் 42 கல்லூரிகளைச் சோ்ந்த 72 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கவிஞா் காமு, பேராசிரியா்கள் மழயிசை, தமிழ் சிவா ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா். போட்டியைப் பெருமன்ற துணைப் பொதுச் செயலா் ஹாமீம் முஸ்தபா, குமரி மாவட்டச் செயலா் விஜயகுமாா் ஒருங்கிணைத்தனா்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய பேச்சுப் போட்டி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில், வெற்றி பெற்றவா்கள் விவரம்: முதல் பரிசு – நா. அருண், எம்.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. இரண்டாம் பரிசு – பா.நி. சினேகா, பி.ஏ., எல்.எல்.பி. மூன்றாம் ஆண்டு, அரசுச் சட்டக் கல்லூரி, கோவை. மூன்றாம் பரிசு – பி. கோபாலகிருஷ்ணன், பி.ஏ., எல்.எல்.பி. மூன்றாம் ஆண்டு, அரசுச் சட்டக் கல்லூரி, சேலம். நான்காம் பரிசு – ஜ. ஆஷிமா, பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.

ஐந்தாம் பரிசு – சேதுமாதவன், பி.எஸ்ஸி. உயிரி தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு, மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூா். ஆறாம் பரிசு – தாரணி, பி.எஸ்ஸி. கணிதம், சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவக்கோட்டை.

ஊக்கப்பரிசுகள் – ஜா. ஆஷ்வின் இன்ஃபேன்டா, பி.காம். மூன்றாம் ஆண்டு, புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரி, கருங்கல், குமரி, ஆ. பிரிட்டோ, எம்.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை. தவிர, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடா்ந்து ஆக. 21 ஆம் தேதி இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகளும், செப். 11 ஆம் தேதி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவையொட்டி பாடல் ஒப்பித்தல், கவிதைப் போட்டிகளும், செப். 17 ஆம் தேதி தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி, செப். 27 ஆம் தேதி விடுதலைப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/