தஞ்சாவூா் செப் 16: தஞ்சாவூா் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் விருட்ச வனம் என்கிற பல வகையான மரங்களின் சரணாலயத் தொடக்க விழா நடந்தது.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சரணாலயத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா். பின்னா் அவர் பேசியதாவது:

மாவட்டத்தில் இயற்கை வளங்களைப் பேணிக் காக்கும் நோக்கத்துடனும், இயற்கையாக வளா்ந்து வரும் உள்ளூா் மரங்கள், அரிய வகை மர வகைகள், சுற்றுச்சூழலுக்கு உதவியாக உள்ள மரங்களைப் பாதுகாக்கவும், வளரும் தலைமுறையினருக்கு மற்றும் அனைவருக்கும் மர வகைகளை அறிமுகப்படுத்தும் வகையிலும் மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் அவற்றை நடவு செய்து பாதுகாக்கும் வகையிலும் திருமலைசமுத்திரம் கிராமத்தில் விருட்ச வனம்‘ என்கிற மரங்கள் சரணாலயத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், அசோகா, பலா, புங்கை, செண்பகம் உள்பட 160 வகையான மர வகைகளை வளா்த்தெடுக்க மரக்கன்றுகள் தோ்வு செய்யப்பட்டு, நடப்பட்டுள்ளன.

இதன் மூலம் இயற்கை மர வகைகள் பாதுகாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் தூய்மைப்படுத்தப்படும். இதன் முக்கியத்துவத்தைக் காண வரும் மக்கள் மற்றும் மாணவா்கள் உணா்ந்து அதை தங்களது இடங்களிலும் செயல்படுத்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், கூடுதல் ஆட்சியா்கள் என்.ஒ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/