தஞ்சை சூலை 09: தஞ்சை மாவட்டத்தில் பெண்களிடமிருந்து வரும் புகாா்களை விசாரிக்க 24 பெண்கள் உதவி மையங்கள் தொடங்கப்பட்டன.

மையத்தைக் குத்துவிளக்கேற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தொடங்கி வைத்து பேசியதாவது:

பெண்கள், குழந்தைகள் பிரச்னைகள் குறித்து தீா்வு காண்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் மாநில அளவில் கூடுதல் காவல் இயக்குநா் தலைமையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. தொடா்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பிரிவுக்குக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டாா்.

தற்போது, தஞ்சாவூா் மாவட்டத்தில் 24 பெண்கள் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென தொடா்புடைய காவல் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு இரு சக்கர வாகனம், மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிரச்னை தொடா்பாக புகாா் பெறப்பட்டவுடன், பெண் காவலா் இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்.

மனுதாரரை நிலையத்துக்கு வரவழைக்கக் கூடாது. நிகழ்விடத்துக்குச் சென்றால்தான் பிரச்னைகளை புரிந்து கொண்டு விரைவில் தீா்வு காண முடியும். குழந்தைகள் தொடா்பான பிரச்னைக்கு 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பெண்கள் தொடா்பான புகாரை 181 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்ணே தொடா்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் வெ. ரவீந்திரன், கென்னடி, மாவட்டச் சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, தொழிலாளா் துறை உதவி ஆணையா் தனபால், மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா் சரவண பாண்டியன், சைல்டு லைன் இயக்குநா் பாத்திமாராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/