கும்பகோணம்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிரசித்தி பெற்ற கும்பகோணம் ராமசுவாமி கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு ராமநவமி விழாவை எளிய முறையில் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி தங்க கொடி மரத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.

இக்கோயிலின் முக்கிய விழாவான வரும் 21ம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் கோயிலுக்குள் குறைவான பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களை அனுமதிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.