தஞ்சை மே 15: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கொரோனாத் தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதையடுத்து, கொரோனாவைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேராவூரணி வட்டாரத்தில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு டீ-சர்ட், அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு 20 பேருக்கு டீ-சர்ட், அடையாள அட்டையை வழங்கி பேசுகையில், ‘கொரோனாத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உதவுதல், காய்ச்சல் கண்டறிதல் முகாம், சளி மாதிரி எடுக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு உதவுதல், வழிகாட்டுதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உதவுதல், புதிய நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறிதல் ஆகிய பணிகளில் சுகாதாரத்துறையினருடன் இணைந்து தன்னார்வத் தொண்டர்கள் செயல்படுவார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம், சளிப்பரிசோதனை நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர்கள் ராம்குமார், பாலச்சந்தர், ராஜேந்திரன், புண்ணியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி, கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி, ஆய்வக நுட்பநர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.