தஞ்சை மே.15 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மாத காலம் நோன்பிருந்து, ரமலான் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதமாச்சரியங்களைக் கடந்து, கொரோனாவால் இறந்த இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி, அனைவரின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆவணம் சாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாத் தொற்று காரணமாக வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த, இஸ்லாமிய இளைஞரான சேதுபாவாசத்திரம் பாவா என்பவருக்கு தகவல் சென்றுள்ளது. 

அப்போது காலை 8 மணி, அவரவர் வீடுகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து தொழுகையை விரைவாக முடித்துக் கொண்டு களத்தில் இறங்கி சடலத்தை, இந்துமத வழக்கப்படி, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறு.நீலகண்டன் முகநூலில் பதிவிட்டிருந்தார். இது வைரலான நிலையில், இஸ்லாமிய இளைஞர்களுக்கு பலரும் மதவேறுபாடின்றி வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் பாவாவிடம் பேசியபோது, ” நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். நாங்கள் மே.13 புதன்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடினோம். அப்போது பேராவூரணியில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் அலைபேசியில் கோரிக்கை வந்தது.

உடனடியாக நானும், எங்கள் அமைப்பின் மாவட்டப் பொருளாளர் அஷ்ரஃப் அலி, சேதுபாவாசத்திரம் கிளையைச் சேர்ந்த சேக்அப்துல்லாஹ், நூர்தீன், சம்பைப்பட்டினம் கிளையைச் சேர்ந்த பரக்கத்அலி, மல்லிப்பட்டினம் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஆகிய 6 பேரும், அங்கு சென்று, அவரது சடலத்தை, பேராவூரணி மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தோம். உறவினர்கள் அருகே வரவே பயந்த நிலையில், அவர்கள் மதமுறைப்படி மாலை அணிவித்து, சடங்குகள் செய்து அடக்கம் செய்தோம். 

இதேபோல் கடந்த 11 ஆம் தேதி பேராவூரணியில் பிரபல மருத்துவர் உடலையும், 12 ஆம் தேதி மாவடுகுறிச்சியில் ஒருவரது சடலத்தையும் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தோம். இன்று வெள்ளிக்கிழமை கூட தென்னங்குடி பகுதியில், தஞ்சாவூர் மருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை அடக்க உதவி கேட்டுள்ளனர். இதோ கிளம்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார். 

சடலத்தை அடக்கம் செய்ய எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள் எனக் கேட்டபோது,” ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிப்பதில்லை. நாங்கள் வந்து செல்லும் வாகனங்களுக்கு பெட்ரோல் செலவு கூட நாங்களே செய்து கொள்கிறோம். தண்ணீர் கொடுத்தால் கூட வாங்கிக் குடிப்பதில்லை. அனைத்து செலவுகளையும் நாங்களே, சொந்தமாக செய்து கொள்கிறோம். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம். வேண்டுமெனில் சடலத்தை அடக்கம் செய்யும் பணியில், பயன்படுத்தப்படும் கவச உடைகளை தரமானதாக அரசே வழங்க வேண்டும்” என்றனர். 

இறந்தவர்களின் உடலுக்கு அருகில் வர உறவினர்களே பயப்படும் நிலையில், நீங்கள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இப்பணியில் ஈடுபடும் போது, உங்கள் குடும்பத்தினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்று கேட்டபோது,” வீட்டில் பயப்படத் தான் செய்கின்றனர். வெளியே போக வேண்டாம் என தடுக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய, இறைவன் எங்களுக்கு அளித்த வாய்ப்பாகத் தான் இதனைக் கருதுகிறோம். 

இன்றைய சூழலில் எங்களது இந்த முன்னேடுப்புகள் மத நல்லினக்கத்தை சமூகத்தில் விதைப்பதாக உள்ளது என்று கூறினார்கள்.

இஸ்லாமிய இளைஞர்களின் இத்தகைய செயல்களை பாராட்டி முகநூலில் பதிவிட்டவரும், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆறு.நீலகண்டன் கூறுகையில்,” 

தமிழக அரசு இவர்களையும் முன்களப்பணியாளர்களாக அங்கீகரித்து, இப்பணியில் ஈடுபட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டால், உயர்மருத்துவ சிகிச்சையும், கொரோனாவுக்கு எதிரான களப் போராட்டத்தில் உயிரிழந்தால், உரிய குடும்ப நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முன்வர வேண்டும்” என்றார். 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.