தஞ்சாவூர் மார்ச் : 5 – தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்! சமவெளி விவசாயிகள் இயக்கம் எச்சரிக்கை!!

சமவெளி விவசாயிகள் இயக்கம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் ஊடகங்களுக்கு அளிக்கும்அறிக்கை. மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நிலைப்பாட்டையும், கர்நாடகா சட்டமன்ற நடவடிக்கையையும் கண்டிக்கிறோம். நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் மேகேதாட்டுவில் நிச்சயம் அணை கட்டுவோம் என்று மற்ற கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களைப் போலவே பேசியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக. ஒரு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்,காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக இப்படிப் பேசி இருப்பதை எங்கள் சமவெளி விவசாயிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி உடனே அறிக்கை வெளியிடுவதுடன், ராகுல் காந்தியிடமும் புகார் அளித்து சுர்ஜிவாலாவை இதற்காக வருத்தம் தெரிவிக்கச் சொல்ல வேண்டும். கர்நாடகா அரசும் சட்ட மன்றத்தில் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உச்சதீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சில மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது. அப்படி இருந்தும் சட்டமன்றத்தில் மேகேதாட்டு அணைக்காக நிதி ஒதுக்குவது என்பது அடாவடித்தனமும் , நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.இது குறித்து தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கவேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழ்நாட்டின் சம்மதமில்லாமல் மேகே தாட்டுவில் அணைகட்ட முடியாது.அப்படி ஏதாவது நடக்கும் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணைபோனால் அது இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கே உலைவைக்கும் செயலாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம்! என்று சு.பழனிராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/