தஞ்சாவூர் நவ 16: சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வு போட்டிகளில் பங்கேற்க தஞ்சாவூர் வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2021- 2022ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஹரியானா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபாடி, வாலிபால், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகிறது.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் வீராங்கனைகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதை ஒட்டி வரும் 24ம் தேதி கபாடி விளையாட்டு தேர்வுப் போட்டி பெண்களுக்கு மட்டும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதேபோல் பெண்களுக்கு மட்டும் வரும் 20ம் தேதி ஹாக்கி விளையாட்டு தேர்வு போட்டிகள் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. பெண்களுக்கு மட்டும் 24ம் தேதி கால்பந்து விளையாட்டு தேர்வு போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது.

தொடர்ந்து வாலிபால் தேர்வு போட்டிகள் ஆண்களுக்கு வரும் 25ம் தேதியும், பெண்களுக்கு 26ம் தேதியும் நடக்கிறது.

விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1.1.2003ம் ஆண்டிற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி. நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் நகல், கல்வி பயில்வதற்கான பள்ளி, கல்லூரி சான்றுகளுடன் மேற்காணும் விபரப்படி காலை 6 மணிக்கு அந்தந்த விளையாட்டு தேர்வு போட்டி நடைபெறும் இடத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/