தஞ்சாவூர் ஆக 27: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அதிகபட்ச விலைக்கு விற்றுப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தஞ்சாவூா், வல்லம், பூதலூா், பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட விளைபொருள்களான நெல், உளுந்து, துவரை, பச்சைபயறு, மிளகாய், தேங்காய், முந்திரி, புகையிலை, பருத்தி, எள், மணிலா, கரும்பு வெல்லம் ஆகியவற்றை அதிகபட்ச விலையில் விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம்.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதால், விளைபொருள்களின் தரத்துக்கேற்ற அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்குத் தரகு மற்றும் கமிஷன் ஏதுமின்றி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதற்குரிய தொகையானது வரவு வைக்கப்படுகிறது.
சரியான எடை உடனடி பணப்பட்டுவாடா, பொருளீட்டுக் கடன், குளிா்பதனக் கிடங்கு, உழவா் நலநிதித் திட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருள்களை இருப்பு வைப்பதற்குச் சேமிப்புக் கிடங்கு வசதி, விளைபொருள்களை உலா்த்துவதற்கு உலா்கள வசதி, ஈரப்பதத்தைக் கண்டறிய ஈரப்பதமானி மற்றும் தினசரி விலை விவரங்களை அறிய இணையதள வசதிகள் உள்ளன.
விவசாயிகள் ஓராண்டில் ஒரு டன் அளவு விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்வதால் உழவா் நலநிதித் திட்டத்தில் சோ்க்கப்பட்டு, விபத்து மற்றும் இயற்கை சீற்றம் போன்றவற்றால் உயிா்சேதம் ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை இம்மறைமுக ஏலத்தில் மூலம் விற்பனை செய்து, அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/