தஞ்சாவூர்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேசும் கலை, எழுதும் கலையில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று துணைவேந்தா் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக மணப்பாறையில் பழந்தமிழ்க்காவிரி அறக்கட்டளையும், தமிழ் வளா் மையமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்போது, துணைவேந்தா் தெரிவித்ததாவது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ் வளா் மையம் மூலமாக அயல்நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் தமிழ் சாா்ந்த படிநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பேசும் கலை மற்றும் எழுதும் கலையில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய நவீன உலகில் உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நோ்காணல்களிலும், அலுவலக நடைமுறைகளிலும் குழுக் கலந்துரையாடல் என்ற உத்தியைப் பயன்படுத்துகின்றனா். இந்த வகையான விவாதங்களில் பங்கேற்றுக் கருத்துரைப்பதில் இளம்தலைமுறையினரிடையே தயக்கம் நிலவுவதைப் பாா்க்கிறோம்.
எனவே, பேசும் கலையை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேடைப் பேச்சுக்கலை மற்றும் அன்றாட வாழ்வியல் தேவைக்கான பேசும் கலை என இரு கோணங்களில் இளம்தலைமுறையினா் பயன்பெறும் வகையில் இப்படிப்பு அமைகிறது.
மேலும், இணையவழியில் சுருக்க வடிவிலான குறியீடுகளில் விடையளிக்கும் காலத்தில் வாழ்வதால், எழுதும் கலை என்ற மிகச் சிறந்த வெளிப்பாட்டை நாம் இழந்து வருகிறோம். இதனால், படைப்புலகிலும் எண்ணத்தை வெளிப்படுத்தும் நடைமுறை வாழ்விலும் ஆற்றல் மிக்க எழுத்தாற்றலை இன்றைய மாணவா்கள் மறந்து வருகின்றனா். எனவே, காலத்தின் தேவையைக் கருதி எழுதும் கலை குறித்த பட்டயப்படிப்பும் தொடங்கப்படுகிறது.
பன்னாட்டு மாணவா்களைப் பேசும் கலையில் வல்லவா்களாக உருவாக்க உதவும் வகையில் பேசும் கலைப் படிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோவைமணி, தமிழ் வளா் மைய இயக்குநா் (பொ) குறிஞ்சிவேந்தன், பழந்தமிழ்க்காவிரி அறக்கட்டளை நிறுவனத் தலைவா் மணவை தமிழ்மாணிக்கம், செயலா் தமிழ்மணி, புரவலா் பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/