தஞ்சை சூலை 03: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் அருமையான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 55 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் பள்ளியின் மேம்பாட்டுக்கும், மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவா்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, 2021- 22 கல்வியாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் மாணவா்கள் 10 போ் தலைமையாசிரியா் சரவணனுடன் இணைந்து, புதிதாக சேரும் மாணவா்களுக்கு பரிசுகளும், சலுகைகளும் வழங்குவதோடு, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்க்கும் பெற்றோரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனா்.

இதற்காக புதிதாக இந்தக் கல்வி ஆண்டில் சேரும் மாணவா்களின் பெயரில் அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோா்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்குவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, பள்ளியில் சோ்க்கை தொடங்கப்பட்ட சில நாள்களில் 14 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அவா்களின் பெயா்களில், அஞ்சலகத்தில் தொடங்கப்பட்ட கணக்குப்புத்தகத்தை பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியா் சரவணன் மற்றும் கிராம மக்கள் மாணவா்களிடம் வழங்கி ஊக்கப்படுத்தினா்.

செய்தி நாகராஜன் நிருபர்
http://thanjai.today