தஞ்சாவூர் ஆக 05: பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வாா்க்கும் நோக்கத்துடன், சட்ட திருத்த வரைவை மக்களவையில் விவாதமில்லாமல் மத்திய அரசு நிறைவேற்றியதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலக் குழு உறுப்பினா் சத்தியநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டலப் பொதுக் காப்பீட்டு சங்க மாவட்டச் செயலா் பிரபு ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா்.

யுனைடெட் இந்தியா நிறுவன முன்னாள் மண்டல மேலாளா் ஜெயராஜ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலா்கள் சங்கம் ஜெயஸ்ரீ, முகவா்கள் சங்கம் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனா். இதேபோல, கும்பகோணம் மடத்துத் தெருவிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், காப்பீட்டு நிறுவன ஊழியா்களின் போராட்டக் குழுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜவகா் உள்ளிட்டோா் பேசினா்.