தஞ்சாவூர் செப் 27: 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களின் ஆதாா் எண்ணை இணையத்தில் பதிவேற்றம் செய்ய நெருக்கடி கொடுக்காமல் வேண்டிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று பள்ளிகள் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு பள்ளி திறக்கப்படவில்லை. 9 முதல் 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், மாணவ,மாணவிகள் வருகை குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பள்ளி மாணவா்களுக்கான இஐஎம்எஸ் (கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம்) என்ற இணையதளத்தில் மாணவா்களின் பெயா், ஆதாா் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களின் ஆதாா் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவா்களின் ஆதாா் எண்ணை பெற்றோா்களிடமிருந்து பெற்று பதிவு செய்வதில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றன.

தொடக்கப்பள்ளி மாணவா்கள் இதுவரை ஆதாா் எண் பெறாமல் உள்ளனா். பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் உடனடியாக அனைத்து மாணவா்களுக்கும் ஆதாா் எண் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதால், ஆதாா் எண் இல்லாத மாணவா்களை இஐஎம்எஸ் இணையதளத்தில் எப்படி பதிவு செய்வது என்று பள்ளிகள் திணறி வருகின்றன. எனவே நெருக்கடி கொடுக்காமல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/