தஞ்சை சூன் 26: தஞ்சை மாற்றுத்திறனாளிகள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா்.தெரிவித்தார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை வழங்கி தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொண்டபடி, அனைத்து காவல் நிலையங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்கப்படும். இந்த பகுதியில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயலாற்றினால் எதையும் சாதிக்க முடியும் என்றாா் .
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து, தஞ்சாவூா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பேசுகையில், மத்திய மண்டல காவல்துறை தலைவரின் உத்தரவின்படி, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அனைத்து காவலா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில், நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் பகாத் அகமது, ஜலீல் முகமது, தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் கே. தாஜூதீன், சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் வரவேற்றாா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்