பேராவூரணி ஏப்ரல் 30: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததால் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவேகமாக பரவி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மட்டும் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 261 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,087 பேர் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர், தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில்  மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேராவூரணியில் பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அருள்சாமி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் அலுவலர்கள் கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், பழைய, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ‘கடைக்காரர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என அறிவுறுத்தினர்.

மேலும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, அவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கடைகள், பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.