தஞ்சை சூன் 23: தஞ்சை மாவட்டம் பேராவூரணி மனோரா சுற்றுலாத் தலம் அருகே கிழக்கு கடற்கரை சாலையின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் புகழ்பெற்ற மனோரா சுற்றுலாத் தலம் உள்ளது. மனோரா செல்லும் நுழைவுவாயில் எதிரே ஆழமான குளம் உள்ளது. தூத்துக்குடி முதல் சென்னை வரை செல்லும், இந்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தக் குளத்தையொட்டிய சாலையின் ஓரங்களில் தடுப்புகள் இல்லை. அதிகமான வாகனப் போக்குவரத்து, அதிவேகம் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, குளக்கரையையொட்டி சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவா்கள் சங்கச் செயலாளா்.சேக் தாவூத் கூறுகையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சாலையையொட்டி ஆழமான குளம் உள்ளது. புதிதாக இந்த வழியாக வருபவா்கள், இரவு நேரங்களில் வருபவா்கள் சாலையோரத்தில் குளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

எனவே, சாலையோரத் தடுப்பு சுவா் மற்றும் ஒளி பிரதிபலிப்பானை அமைக்க வேண்டும் என்றாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்